2017 ன் முதல் நாள் அனுபவம்.

இந்த பதிவு 2017 இன் முதல் நாளை பற்றியது.  அந்த இடத்தை பற்றி கேட்டிருக்கிறேன்.Saree Shoot செய்வதற்கு நண்பர்கள் பரிந்துரைத்த இடம் அது.அதன் பிறகு நேற்றுதான் (Jan 1,2017) அங்கு செல்ல நண்பன் ஒருவன் யோசனை சொன்னான்.வேறு வேலை இல்லை என்பதாலும், கொஞ்சம்  ஆர்வம் இருந்ததாலும் ஒப்புக்கொண்டேன் .அப்பொழுது வரை  சென்னையில் அருமையான, இத்தனை நாளை தவறவிட்ட ஒரு இடத்திற்கு போக போகிறேன் என்பதை அறிந்திருக்கவில்லை. மாயாஜால் திரையரங்கருகில் நண்பணின்  நண்பர்களுக்காக காத்திருந்தோம்.பொறுமை இழக்கும் தருவாயில் வந்து சேர்ந்தனர்.
அவ்விடம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தக்ஷிண சித்ராவாகும் .  புகைப்படம் எடுக்க 100 என்று போட்டிருந்தது . தேவை இருக்காது என்றே எண்ணி முதலில் மறுத்து பின் நண்பன் சொன்னதால் பையில் இருந்த ஒற்றை நூறைக் கொடுத்தேன்.
 வெயில் வெளியில் தகித்தலும், உள்ளே நல்ல சூழலை உணர முடிந்தது.
 3 மணிக்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி இருப்பதாக சொல்லவும், முதலில் அங்கு செல்ல ரூ 10 கொடுத்து அனுமதி வாங்கி விரைந்தோம். அது ஆம்பூர் இல்லம் என்று பெயரிடப்பட்ட  இடத்தில்  நடந்தது.அங்கு ஏற்கனவே ஆட்டம் தொடங்கியிருந்தது . வந்திருந்தவர்களுள் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு கதையை விவரித்து கொண்டு இருந்தனர். சிலர் படமெடுத்துக் கொண்டும்,தங்கள் கருவிகளில் பதிவு செய்து கொண்டும் இருந்தனர்; சிலர்  கவனித்தனர். பொம்மலாட்டத்தில் சிறிது ஆங்கிலம் கலந்தே இருந்தது. கிருஷ்ணரின் பாத்திரத்தை மட்டும் என்னால் அறிய முடிந்தது .
நல்ல கை  தட்டலுடன் முடிவுற்றது . அதுவே  நான் பார்த்த முதல் பொம்மலாட்டம் .
பின் ஆம்பூர் இல்லத்தை சுற்றி பார்க்க தொடங்கினோம். அங்கு திரு.வேதாந்தம் என்பவர்  கொடையாக வழங்கிய பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
நேரமின்மையின் காரணமாக பறக்க வேண்டியிருந்தது.  ஆனாலும் மனமில்லை. அதைத் தொடர்ந்து நெசவாளர் இல்லம் , குயவர் இல்லம், செட்டிநாடு இல்லம் என தமிழ் முறை கலாச்சாரம் மட்டுமின்றி சிரிய-கிறித்துவ ,சிக்மகளூர் முறையிலான கலாச்சார வீடுகளும் பார்க்க முடிந்தது. அவைகளை அப்படியே பெயர்த்து வந்து வைத்தது  போல் அசலாக இருந்தன.
 வந்திருந்த மக்கள் பலரிடம் ஆச்சர்யத்தை காண முடிந்தது. வெளிநாட்டினரும் ஒவ்வொரு கலாச்சார முறைகளை பற்றியும் கேட்டு அறிந்து சென்றுகொண்டிருந்தனர்.
ஓர் வீட்டின்  முற்றத்தின்  நடுவில் அமர்ந்து படம் எடுத்து கொண்டிருந்தேன். அந்த முற்றத்தின் கூரை  சமீபத்திய வர்தா புயலில் சேதமடைந்து விட்டதாகவும் அங்கு உட்காரவேண்டாமென அங்கிருந்த பாட்டி கூடை முடைந்து கொண்டே சொன்னார்.
            அந்த வீட்டில் ஏர் கலப்பையும், விவசாயம் தொடர்புடைய  மரக்கருவிகளும்  ( நெல் உலர்த்த மற்றும் நிலம் உழ பயன்படுத்தியது போன்ற பொருட்கள் ) வைக்கப்பட்டிருந்தன. ஒரு 23 வயதுடைய இளைஞன் தன் வீட்டு பெண்களிடம் ஏன் நிலத்தை உழ வேண்டும் என்றும், அக்கருவிகளை டிராக்டர் உடன் ஒப்பிட்டும் நிறைய பேசிக்கொண்டிருந்தான். அவர்களும் சில பாத்திரங்களை காட்டி "ஹேய், இது நம்ம பாடி வீட்ல கூட இருக்கில்ல? நான் கூட இதெல்லாம் இப்போ யாரு யூஸ்  பண்ண போரான்னு வெலைக்கு  குடுத்தறலாம்னு இருந்தேன் .. " என்பது போல பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது என் வீட்டில் பாட்டி, தன்  அம்மா தன் திருமணத்திற்காக கொடுத்த பித்தளைப் பாத்திரங்கள் இன்னும் என் வீட்டில் தங்கையின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருப்பது நினைவுக்கு வந்தது .

   அங்கு  வந்தவர்கள்  பேசுவதை தொடர்ந்து  கேட்க கேட்க இதயம் தன் துடிப்பைக் கூட்டியது. நாள்தோரும் உபயோகிக்கும். மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களின் அடிப்படையையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறியத்துடிக்கும் நமக்கு, மனித இனத்தின் தலையாய, இன்றியமையாத தொழிலான விவசாயத்தைப் பற்றி அறிய ஆர்வம் ஏனோ இருப்பதில்லை.எனது தந்தை விவசாயியாக இருந்தும் நான் அதைப்பற்றிய அடிப்படை தெரியாமல் இருப்பதை எண்ணி வெட்கினேன்.
அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களுள்  பல 70-80 வருடத்திற்கும்  குறைந்த வயதுடையனவேயாகும். அதாவது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த கலாச்சார சொச்சங்கள் கூட நம் வழக்கை முறையில் இன்று இல்லை என்பதையே அங்கு நான் கண்ட காட்சிகளும் கேட்ட பேச்சுகளும்  உணர்த்தின.இது ஒரு பக்கமிருக்க, வரும் தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லவும்,கற்றுக்கொடுக்கவும் என்ன இருக்கபோகிறது என்ற கேள்வி அடுத்த  கன்னத்தில் அறைந்தது .

இவ்வாறாக பல எண்ணங்களுடன் நானும் அங்கிருந்த பொருட்களுடன் புதிய கோணங்களில் பதிவு  செய்து கொண்டிருந்தேன்.அங்கு பலர் selfie குச்சிகளுடன் திரிந்தார்கள். அவர்கள் selfie  மூலம் தங்களை அங்கிருந்த பொருட்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
 நம் பெற்றோர்  அன்றாடம் உபயோகித்த பொருட்கள் காட்சிப்படுத்த பட்டதைக் கண்டுவிட்டு, சல்லிக்கட்டயும் வரலாற்றுப் புத்தகத்தில் படிக்க விட்டுவிடுவார்களோ என்ற ஐயத்துடன் ஒயிலாட்டம் பார்க்க நின்ற கூட்டத்திற்குள் கலந்துகொண்டு பின் மனமில்லாமல்  வெளியேறினேன்.


பி.கு
இதை சாத்தியமாக்கிய  சத்யசீலனுக்கு நன்றிகள்.
விரைவில் எடுத்த படங்களின் உரலியை இடுகிறேன். காத்திருக்கவும்.

                                                            நன்றி!!





Comments